வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Go down

தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். Empty தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

Post by தருண் Sat May 24, 2014 7:37 pm

சமீபத்தில் நண்பர் ஒருவரது வீட்டுக்குப் போயிருந்தேன். தனியார் கம்பெனியில் வேலை பார்க்கும் நடுத்தரவர்க்கத்து குடும்பஸ்தர்தான் அவர். என்றாலும் ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின், எல்சிடி டிவி, டூவீலர், லேப்டாப் என ஒரு மிடில் க்ளாஸ் வீட்டில் இருக்கவேண்டிய அத்தனை பொருட்களும் அவர் வீட்டில் இருந்தன. 'எப்படி வாங்கினீர்கள் இதையெல்லாம்?’ என்று கேட்டேன்.

''எல்லாம் இ.எம்.ஐ.யில்தான். ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தால், அதை 24 மாதம் தவணை கட்டுகிறமாதிரி எடுப்பேன். இரண்டு வருடத்தில் அந்தப் பொருளுக்கான பணத்தைக் கட்டிவிட்டு, மீண்டும் அடுத்தப் பொருளை வாங்கிவிடுவேன். இப்படி கடந்த பத்து ஆண்டுகளில் இந்தப் பொருட்களையெல்லாம் வாங்கிவிட்டேன்'' என்றார் பெருமைபொங்க.

எனது இந்த நண்பரின் மனநிலையில்தான் இன்றைக்கு நம் சமூகத்தில் பலரும் இருக்கிறார்கள். இ.எம்.ஐ (EMI – Equated Monthly Installment) என்பது இன்று நாம் சர்வசாதாரணமாகக் கேள்விபடும் ஒரு வார்த்தையாக மாறிவிட்டது. பல லட்சங்கள்/ கோடிகளில் வாங்கும் வீட்டுக் கடனிலிருந்து, சில ஆயிரங்களில் வாங்கும் மிக்ஸி/ கிரைண்டர் வரை இன்றைய தேதியில் அனைத்துப் பொருட்களையும் சுலபத் தவணைமுறையில் வாங்கவே இன்றைக்கு பலரும் விரும்புகிறார்கள்.

உண்மையில் இதுமட்டும்தானா இ.எம்.ஐ-ல் கிடைக்கிறது? இல்லை. மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துகொள்ள, ஆண்ராய்டு செல்போன் வாங்க, வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல, இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்ட, அவ்வளவு ஏன், ஆடைகள் வாங்குவதற்குக்கூட இன்றைக்கு இ.எம்.ஐ முறையில் சுலபத் தவணைத் திட்டங்கள் ஏராளமாக வந்துவிட்டன.

ஒரு காலத்தில் யாரோ ஒரு சிலர் தேர்வு செய்யும் இந்தத் திட்டங்கள் இன்று நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸ்-ஆக மாறியது எப்படி என்பதை யோசித்துப் பார்த்தேன்.

மனிதர்களில் இருவகையினர் உண்டு. முதல்வகை மனிதர்கள், பணத்தைச் சேர்த்துவிட்டு செலவு செய்பவர்கள். இரண்டாவது வகை மனிதர்கள், பணத்தை முதலில் செலவு செய்துவிட்டு, பிற்பாடு அதைச் சேர்ப்பவர்கள். அதாவது, முதலில் கடன் வாங்கிச் செலவழித்துவிட்டு, பிற்பாடு அந்தக் கடனை அடைப்பவர்கள்.

இந்த இரண்டுவிதமான மனிதர்களில் யார் புத்திசாலி என்று கேட்டால், இரண்டாவது வகையினரே என்று பலர் சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்பது பலருக்கும் தெரியாது.

வீட்டு உபயோகப் பொருட்களை நாம் தவணைத் திட்டத்தின் மூலம் வாங்கும்போது, அந்தப் பொருளை உடனடியாக வாங்கி, அனுபவிக்க முடிகிறதா என்று மட்டும்தான் பார்க்கிறோம். நமது அந்த ஆசை நிறைவேறுகிற அதேவேளையில், வட்டி என்கிற விஷச்செடியும் நம் காலைச் சுற்றிப் படர்வதை நாம் உணர்வதே இல்லை.

உதாரணமாக, ஏ.சி வாங்குவதற்கு முன்னணி நிறுவனம் ஒன்று 12% வட்டியில் கடன் கொடுக்கிறது. மிகவும் சுலபமான முறையில் கடன் தருகிறது. ஆனால், இந்த 12% வட்டி என்பது ஃப்ளாட் (Flat) வட்டி ஆகும். இந்த வட்டியை அசல் குறைந்துவரும் வட்டி விகிதத்தில் Reducing Balance Method கணக்கிட்டுப் பார்த்தால், ஏறக்குறைய 21.45 சதவிகிதத்துக்கு சமம். அதாவது, சொல்வது 12%. ஆனால், வாங்குவதோ 21%.

இதுதவிர, முதல் மாத தவணைத் தொகையை அட்வான்ஸாகவே செலுத்திவிட வேண்டும். பிராசஸிங் சார்ஜ் தனியாக கட்ட வேண்டும். தவணை கட்ட தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் தனியாக கட்டவேண்டும். சில நிறுவனங்கள் நாம் போட்ட மார்ஜின் தொகைக்கும் சேர்த்து வட்டியைக் கணக்கிடுகின்றன. இன்னும் சில நிறுவனங்கள் 10 மாதத்துக்குள் தவணையைச் செலுத்த வேண்டும் என்று கூறிவிட்டு, 12 மாதத்துக்கு வட்டியைக் கணக்கிடுகின்றன.

தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். Nav12g

ஒரு ஃபிரிட்ஜ் வாங்குவதற்கு ஒருவர் ரூ.10,000 கடன் வாங்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஃப்ளாட் வட்டி சதவிகிதமும், அசல் குறைந்துவரும் வட்டி விகிதமும் கீழே பட்டியலாக கொடுக்கப்பட்டுள்ளது. சமமான வட்டி விகிதத்தில் உண்டான புள்ளிவிவரங்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த இரண்டு பட்டியல்களையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள்.

பட்டியலைப் பார்த்தீர்களா? இனி இதைக் கொஞ்சம் விளக்கமாக எடுத்துச் சொல்கிறேன்.

தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். Nav12h

நாம் வாங்கும் பொருளுக்கு 10 சதவிகித வட்டி என்று நினைத்து சுலபத் தவணையில் பொருட்களை வாங்குகிறோம். ஆனால், அது எப்படி 33.50 சதவிகிதமாக மாறுகிறது என்று பார்த்தீர்களா? இதுவே இப்படி என்றால், நாம் போட்ட மார்ஜின் தொகைக்கும் சேர்த்து வட்டியைக் கணக்கிடுவது, 10 மாத கடனுக்கு ஒரு வருட வட்டியைப் போடுவது, அபராத தொகை வசூலிப்பது போன்ற அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

தவணை முறைத் திட்டத்தைத் தேர்வு செய்கிறவர்கள் சொல்லும் காரணங்கள் சில. அந்தக் காரணங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஜீரோ பர்சன்ட் வட்டி!

'சார், நமக்குத் தேவையான பொருளை வாங்க '0’ பர்சன்ட் வட்டியில கடன் தர்றாங்க. அதை ஏன் வேணாம்னு சொல்லணும்?’ என்கிறார்கள் சிலர். ஆனால், உண்மையில் '0’ பர்சன்ட் வட்டியில்தான் நமக்கு கடன் தருகிறார்களா?

0% வட்டியில் இருவகை உள்ளன. ஒன்று, தயாரிப்பாளர் அல்லது விற்பனையாளர், பொருள் வாங்குவதற்கு உண்டான வட்டிப் பணத்தை வங்கிக்கு கொடுத்துவிடுவார். அப்போது நுகர்வோருக்கு உண்மையிலேயே 0% வட்டி கிடைக்கும். ஆனால் இதுபோன்ற உண்மையான 0% வட்டி கிடைப்பது மிக மிகக் குறைவு. நாம் தேர்வு செய்யும் பெரும்பாலான தவணைத் திட்டங்களில் வட்டியை மறைமுகமாக சார்ஜ் செய்துவிடுகிறார்கள். எப்படி என்று கேட்கிறீர்களா?

ரூபாய் 10,000 மதிப்புள்ள பொருளை வாங்கும்போது வட்டி ஏதும் இல்லை; ஆனால், ஒருமுறை பிராசஸிங் கட்டணம் ரூ.500 மட்டும் செலுத்துங்கள் என்று கூறுவார்கள். ரூ.10,000-த்தை ஐந்து தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் செலுத்திவிடுங்கள் என்று கூறுவார்கள். மொத்தத்தில், இந்த 500 ரூபாய் என்பது மறைமுக வட்டிதான். இது ஏறக்குறைய 20% வட்டிக்குச் சமம்.

இன்னும் சில நிறுவனங்கள், ஐந்து மாதத்தில் ஆறு தவணை களையும், முதல் மாதத்திலேயே இரண்டு தவணையையும் கட்டச் சொல்வார்கள். ஆக மொத்தத்தில், ரூ.10,000 கடனுக்கு ரூ.12,000 செலுத்துவோம். ஆகவே, 0% வட்டி என்று யாரும் கூறினால் அதை அப்படியே நம்பி ஏமாறாதீர்கள். இதுமாதிரியான ஏமாற்று அறிவிப்புகளைத் தடுக்கத்தான் மத்திய ரிசர்வ் வங்கி '0’ பர்சன்ட் வட்டியில் கடன் தரக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறது.

நெனைச்சா வாங்கணும்!

'சார், ஒரு பொருளை வாங்க நெனைச்சா உடனே வாங்கி அனுபவிக்கணும்’ என்பது இன்னும் சிலரது வாதம். இது அச்சு அசலான மிடில் க்ளாஸ் மனோபாவம். சிலச்சில பொருட்களை நாம் வைத்திருப்பதன் மூலம் நாம் சமூகத்தில் எந்தவகையிலும் குறைந்தவர்கள் இல்லை என தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் எண்ணம் இது. ஆனால், சில பொருட்களை வாங்குவதால் மட்டுமே நம் நிலை உயர்ந்துவிடாது. தவிர, அது இல்லாமலே சில மாதங்களை நம்மால் ஓட்ட முடியும். உடனே பைக் வாங்க முடியாவிட்டால் பேருந்தில் அல்லது ரயிலில் அலுவலகம் செல்ல லாம். ஏ.சி உடனே வாங்க முடியாவிட்டால், சற்று வேர்வையைப் பொறுத்துக்கொள்ளலாம். செல்போனைத் தவணை முறையில் வாங்காமல், கையில் இருக்கும் போனையே இன்னும் சிலகாலம் உபயோகிக்கலாம். எலெக்ட்ரானிக் சாதனங்களில் மற்றுமொரு வசதி என்னவெனில், காத்திருக்க காத்திருக்க விலை குறையும். இதுபோல், நீங்கள் வாங்க நினைக்கும் பொருளை அல்லது சேவையை, ஓரிரு ஆண்டுகள் ஒத்திப்போட்டால், பல நன்மை கிடைக்கும்.

காசு கரைஞ்சிடும்!

'சார், என் கையில் பணம் இருந்தா தங்காது. ஆனா, கடன் வாங்கிட்டா, ஒழுங்காக அந்தக் கடனை கட்டுவேன். ஆகவேதான் கடன்ல பொருள் வாங்குறேன்’ என்கிறார்கள் இன்னும் சிலர். நம்மால் முடியாது என்று நினைத்தால், எதுவுமே முடியாதுதான். நீங்கள் ஆர்.டி-யில் போட்டு அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டு ஒரு பொருள் வாங்க முடிவு செய்யுங்கள். அது உங்களால் நிச்சயம் முடியும். அல்லது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வட்டியில்லாத கடன் தந்தால், அதைக் கொண்டு பொருளை வாங்குங்கள்.

இ.எம்.ஐ.தான் ஈஸி வழி!

'எங்களைப் போன்ற மாத சம்பளம் மற்றும் குறைவான சம்பாத்தியம் உள்ளவர்களுக்கு தவணைத் திட்டங்கள் வரப்பிரசாதம்’ என்கிறார்கள் இன்னும் சிலர். உண்மைதான், இ.எம்.ஐ என்கிற திட்டம் இல்லாவிட்டால், இன்றைக்கு பல நடுத்தர வர்க்கத்து வீடுகளில் ஃபிரிட்ஜையோ, வாஷிங்மெஷினையோ பார்க்க முடியாது. ஆனால், இ.எம்.ஐ திட்டங்களினால், இதுமாதிரியான பொருட்களை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனங்களுக்குத்தான் அதிக லாபமே ஒழிய, சாதாரண மக்களுக்கு பண இழப்புதான்.

சரி, இ.எம்.ஐ.யைவிட எளிய திட்டம் மூலம் பொருட்களை வாங்க ஏதேனும் வழி இருக்கிறதா என்றுதானே கேட்கிறீர்கள்? நிச்சயம் வழி இருக்கிறது. அதை இப்போது சொல்கிறேன்.

நீங்கள் ஒரு பொருளை வாங்க நினைத்தால், அன்றிலிருந்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டு காலத்துக்கு அந்த முடிவை ஒத்திப்போடுங்கள். அப்படி ஒத்திப்போடும் காலத்தில், நீங்கள் இ.எம்.ஐ தொகையாக ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பணம் செலுத்துவீர்களோ, அந்தத் தொகையை ஒரு லிக்விட் / அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மியூச்சுவல் ஃபண்டில் அல்லது ஆர்.டியில் ( Recurring Deposit) போடலாம். அந்தத் தொகை முதிர்வு பெறும்போது உங்களுக்குத் தேவையான பொருளை வாங்கிக்கொள்ளலாம்.

உதாரணமாக, நீங்கள் ரூ.25,000 மதிப்புள்ள ஒரு வாஷிங் மெஷினை வாங்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் குறைந்த வட்டியான 10 சதவிகிதத்தில் கடன் வாங்குகிறீர்கள் என எடுத்துக்கொள்வோம். அசலும் வட்டியுமாக மொத்தம் நீங்கள் ரூ.27,500 செலுத்தவேண்டியிருக்கும். இதுதவிர, பிராசஸிங் சார்ஜ் என்று குறைந்தது ரூ.1,000 வாங்கிவிடுவார்கள். ஆக மொத்தம், உங்கள் கையில் இருந்து செல்வது குறைந்தது ரூ.28,500.

இதை 12 மாதக் கடன் என எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.2,375 ஆகும். அந்த வாஷிங்மெஷினை உடனே வாங்காமல் ஓர் ஆண்டு காலத்துக்கு ஒத்திப்போடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த ஓர் ஆண்டில், நீங்கள் இ.எம்.ஐ.ஆகக் தரவேண்டிய ரூ.2,375-ஐ ஒரு ஆர்.டி அல்லது லிக்விட் ஃபண்டில் போட்டால், உங்களுக்கு 9% வட்டி கிடைக்கும். ஒரு ஆண்டு கழித்து உங்களுக்கு முதிர்வுத்தொகையாக ரூ.29,917 கிடைக்கும். ரூ.25,000-க்கு வாஷிங் மெஷினை வாங்கிவிட்டு, மீதிப் பணத்தை பிற செலவுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

இப்படி நீங்கள் 'ஹாட் கேஷ்’ தந்து வாங்கும்போது, ரூ.25,000 மதிப்புள்ள வாஷிங் மெஷினை 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை குறைத்துக்கூட வாங்கலாம். ஏனென்றால், உடனே பொருளுக்கான பணம் வருகிறது என்னும்போது, கொஞ்சம் பணத்தைக் குறைத்துக்கொள்ள கடைக்காரர்கள் தயங்க மாட்டார்கள். ஆனால், தவணைத் திட்டத்தில் பொருள் வாங்குகிறவர்களுக்கு விலைக் குறைப்பு கிடைக்காது.

ஒரு வாஷிங்மெஷினை தவணைத் திட்டத்தில் வாங்குவதற்கும், உடனே பணம் தந்து வாங்குவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பட்டியலாக கீழே தந்திருக்கிறேன், முதலில் அதைப் பாருங்கள்.

தவணைத் திட்டங்கள்: லாபமா அல்லது நஷ்டமா? சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். Nav12f

பார்த்துவிட்டீர்களா? ஒரு பொருளை ஒரு வருடம் காத்திருந்து வாங்குவதால் உங்களுக்கு ஏறக்குறைய 5,417 ரூபாய், அதாவது 22 சதவிகிதம் (5,417/ 25,000) லாபம் கிடைக்கிறது. இந்தத் தொகையை வைத்து நாலு பொருள் வாங்குமிடத்தில், நீங்கள் ஐந்தாவதாக வேறு ஒரு பொருளை வாங்கிவிடலாம்.

மேலும், எந்தச் செயலையும் திட்டமிட்டு செய்யும்போது அது முழுமையாக இருக்கும். இதுபோல், பல நுகர்வோர் பொருட்களை வாங்கும்போது, சற்று கணக்கிட்டுப் பார்த்தீர்களேயென்றால், அதில் உள்ள மர்மம் உங்களுக்குப் புரியும். உங்களுக்குத் தெரியாமலே உங்களிடமிருந்து எவ்வளவு பணத்தைப் பிடுங்குகிறார்கள் என்பது புரியும். எனவே, அடுத்தமுறை மாத தவணைத் திட்டங்களை தேர்வு செய்யும்முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள்.

பொதுவாக, சிறிய பொருட் களை இ.எம்.ஐ ஆப்ஷனில் வாங்குவது உகந்ததல்ல. நீங்கள் வாங்கப்போகும் பொருளின் விலை உங்களின் மூன்று மாத சம்பளத்துக்குள் இருந்தால், அதை இ.எம்.ஐ ஆப்ஷனில் வாங்காதீர்கள். பணத்தைச் சேமித்துக்கொண்டு வாங்குவதே சிறந்தது.

ரெடிட் கார்டில் இ.எம்.ஐ. வேண்டாமே!

தவணைத் திட்டமே மோசம். இந்தத் தவணைத் திட்டத்தை கிரெடிட் கார்டு மூலம் இ.எம்.ஐ.ஆக வாங்குவது இன்னும் மோசம். உங்கள் கிரெடிட் கார்டை எளிதாக ஸ்வைப் செய்வதன் மூலம் ஆட்டோமெட்டிக்காக இ.எம்.ஐ லோன் துவங்கி விடும். அவர்கள் போடும் கட்டணங்களை யார் சரி பார்க்கப் போகிறார்கள்? நீங்கள் கிரெடிட் கார்டுக்கு செலுத்தவேண்டிய தொகையில் காலதாமதம் ஏற்பட்டால், தாமதக் கட்டணம் என்று ஒரு நல்ல தொகையை வசூலிப்பார்கள். அதற்கு மேல் வட்டி குறைந்தது 24 சதவிகிதமாவது போடுவார்கள். வட்டி கட்டுவது தாமதமானால், அதற்கு மேலும் வட்டி கட்டி கொண்டிருப்பீர்கள். எனவே, ஜாக்கிரதை!

வீட்டுக்குக் கடனுக்கு இ.எம்.ஐ. பெஸ்ட்!

தவணைத் திட்டம் பொதுவாக மோசமானது என்றாலும், வீட்டுக் கடனில் வீடு வாங்க அதுதான் பெஸ்ட். ரூ.10, 20 லட்சத்தில் ஒரு வீடு வாங்கும் அளவுக்கு நம்மிடம் மொத்தமாக பணம் இருக்காது. இந்தத் தொகையை சேமிக்க பல வருடங்கள் ஆகிவிடும். வீடு வாழ்வதற்கு அவசியம். நாம் இ.எம்.ஐ.-ஆக கடன் வாங்காவிட்டால், ஒவ்வொரு மாதமும் தரும் வாடகையை இ.எம்.ஐ.யுடம் சேர்த்து கட்ட முடியும். தவிர, வீட்டுக் கடனுக்கு பல வரிச் சலுகைகளும் உள்ளது. வட்டியும் குறைவுதான். 30 வருட கடனுக்கு ஒருமுறைதான் பிராசஸிங் சார்ஜ். எனவே, வீட்டுக் கடனுக்கு இ.எம்.ஐ.தான் பெஸ்ட்.

ந.விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum