வர்த்தகம் மற்றும் சேமிப்பு
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தகர்க்க முடியாத கோட்டைப் பங்குகள்!
by தருண் Mon Aug 07, 2017 11:27 am

» ஸ்மால் & மிட் கேப் ஃபண்ட் முதலீடு... - கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்!
by தருண் Fri Jul 21, 2017 10:09 am

» ஆவணங்களை லேமினேட் செய்வது சரியா?
by தருண் Fri Jul 21, 2017 10:04 am

» வருமான வரிச் சலுகைகள் & முதலீடுகள்! - நில்... கவனி... செய்!
by தருண் Fri Jul 21, 2017 10:00 am

» வருமான வரிக் கணக்குத் தாக்கல்... தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:47 am

» அரசு ஊழியர்களுக்கு வருமான வரிக் கணக்கீடு எப்படி?
by தருண் Thu Jul 20, 2017 9:44 am

» இயற்கைப் பேரழிவிலிருந்து காக்கும் காப்பீடுகள்!
by தருண் Thu Jul 20, 2017 9:40 am

» இஎல்எஸ்எஸ் ஃபண்ட் யாருக்கு ஏற்றது?
by தருண் Thu Jul 20, 2017 9:38 am

» பைசா பங்குகளில் முதலீடு செய்யலாமா?
by தருண் Thu Jul 20, 2017 9:37 am

» வருமான வரிக் கணக்கு தாக்கல் இனி ஈஸிதான்!
by தருண் Thu Jul 20, 2017 9:35 am


மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்?

Go down

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? Empty மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்?

Post by தருண் Tue Dec 30, 2014 3:51 pm

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்?
பதில் தரும் 13 காரணங்கள்...
சொக்கலிங்கம் பழனியப்பன், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர்
.


இன்றைய தேதியில் நீண்ட கால முதலீட்டை மேற்கொண்டு, வாழ்க்கையின் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நினைக்கும் ஒருவருக்கு மியூச்சுவல் ஃபண்ட் என்பது மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஏன், வேறு முதலீட்டு வகைகள் எல்லாம் இல்லையா, அதில் முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் நமது எதிர்காலத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

மற்ற எல்லா முதலீடுகளையும்விட மியூச்சுவல் ஃபண்ட்தான் பெஸ்ட் என்பதற்கு 13 காரணங்கள் உள்ளன. இந்தக் காரணங்களை நீங்கள் தெரிந்து கொண்டால், நீங்களும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை நிச்சயம் தேர்வு செய்வீர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்தக் காரணங்கள் இதோ:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு ஏன் பெஸ்ட்? Nav24a

1. மிக, மிக வெளிப்படையான முதலீடு!

இன்று நீங்கள் ரூ.1 லட்சத்தை எடுத்து வங்கி டெபாசிட்டில் போடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கி உங்கள் பணத்தை யாருக்கு கடனாகக் கொடுக்கிறது என்ற விவரம் உங்களுக்குத் தெரியாது. உங்களது டெபாசிட்டுக்கு, வங்கி உங்களுக்குக் கொடுக்கும் வட்டி எவ்வளவு சதவிகிதம் என்பது மட்டும்தான் தெரியும். உங்களது பணத்தை என்ன வட்டி விகிதத்துக்குக் கடன் கொடுக்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது.

அதுபோல், லட்சக்கணக்கான இந்தியர்கள் முதலீடு செய்யும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் திட்டங்களில் வசூலிக்கப்படும் பணத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் எதில், எப்படி முதலீடு செய்கின்றன என்பது யாருக்கும் தெரியாது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் எங்கெங்கு, என்னென்ன சதவிகிதத்தில் முதலீடு செய்யப்படுகிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக 365 நாளும் தெரிந்துகொள்ளலாம். மேலும், கிம் (KIM – Key Information Memorandum) என்ற புத்தகத்தில் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது ஒவ்வொரு திட்டமும் எங்கு, எவ்வாறு முதலீடு செய்யும் என்பதை விண்ணப்பப் படிவத்துடன் வெளியிடுகின்றன. அதில் கூறியுள்ளபடிதான் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் முதலீட்டினை மேற்கொள்ளும். இதில் பெரிய மாறுதல் ஏதும் இருப்பின், அனைத்து முதலீட் டாளர்களுக்கும் உடனடியாகக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும்.

நீங்கள் வாங்கிய இடத்தின் தினசரி விலை என்னவென்று தெரிந்துகொள்ள முடியாது. ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் தினசரி என்ஏவியை வெளியிடுகின்றன. எனவே, மியூச்சுவல் ஃபண்டுகள்போல் மிகவும் வெளிப்படைத்தன்மை நிறைந்த வேறொரு முதலீட்டைக் காண்பது மிக மிக அரிது.

2. நிலத்தைவிட, தங்கத்தைவிட பாதுகாப்பானது!

இன்றைய தினத்தில் தங்கத்தை வாங்கி வீட்டில் வைத்திருப்பதன்மூலம் ஆபத்தை நாமே விலை தந்து வாங்குகிறோம். பெண்கள் நகையை வீதிகளில் அணிந்து செல்லக்கூட பயப்படு கிறார்கள். அவற்றைப் பாதுகாப்பாக வைப்பதற்குப் பணம் கொடுத்து வங்கிகளில் லாக்கர் வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கிறது. லாக்கரில் திருடுபோனால் அதற்கு வங்கி உத்தரவாதம் ஏதும் தராது.

இது இப்படி இருக்க, இடத்தை (Plot) வாங்கினால், அதில் யார் எப்போது ஆக்கிரமிப்பார்கள் என்பது தெரியாது. நிலத்தைக் குத்தகைக்குவிட்டாலும் சில பிரச்னைகள் வரவே செய்கிறது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பாதுகாப்பான முதலீடு. நீங்கள் குறிப்பிட்டுள்ள உங்கள் வங்கிக் கணக்கைத் தவிர, வேறு எந்தக் கணக்குக்கும் செல்லாது. எனவே, பாதுகாப்பு பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.

3. உங்களைத் தவிர யாருக்கும் தெரியாது!

நீங்கள் பெரிய வீடு வைத்தி ருந்தால் ஊருக்கே தெரியும். தங்க நகைகளை அணிந்து கொண்டு சென்றால் ஊரார் அனைவருக்கும் தெரியும். நீங்கள் எம்பிஏ (M – Mercedes Benz; B – BMW; A – Audi) காரை ஓட்டிக் கொண்டு சென்றால், நீங்கள் எவ்வளவு பெரிய பணக்காரர் என்று உலகத்துக்கே தெரிந்துவிடும். அதனால் நண்பர்களும் உண்டாகலாம்; எதிரிகளும் உண்டாகலாம்.

ஆனால், நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் வைத்திருக்கும் தொகை எத்தனை கோடியானாலும், நீங்கள் சொன்னால் தவிர, வேறு யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. உங்கள் முதலீடு மற்றவர்களுக்கு தெரிந்து, உங்கள் நிம்மதி பறிபோய்விடுமோ என்கிற கவலை இல்லாமல், நீங்கள் நிம்மதியாகத் தூங்கலாம்.

4. அள்ளித்தந்த ஃபண்டுகள்!

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த காலத்தில் லாபங்களை முதலீட்டாளர்களுக்கு அள்ளித் தந்திருக்கின்றன. கடந்த காலங் களில் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானங்களைப் போல் 2 – 3 மடங்கு வருவாயை ஒவ்வொரு ஆண்டும் தந்துள்ளன. இனிவரும் காலங்களிலும் இது தொடர வாய்ப்புகள் அதிகம்.

கடந்த 10, 15, 20 ஆண்டுகளில் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தவர்கள் ஆண்டுக்காண்டு கூட்டுவட்டி அடிப்படையில் 20 சதவிகிதத்துக்கும் மேலான வருமானத்தைச் சுலபமாகச் சம்பாதித்துள் ளார்கள். ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குமுன் ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்று 80 லட்சத்துக்கும் மேலாக உள்ளது. இதுபோல் இனிவரும் காலத்திலும் பிற சொத்துக்களுடன் ஒப்பிடும்போது, ஓர் உயரிய வருமானத்தைத் தர வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அந்த அளவுக்கு முக்கியமான விஷயமாக உள்ளது.

5. பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம்!

நாம் செய்யும் எந்த முதலீடாக இருந்தாலும், அது பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் தர வேண்டும். உதாரணத்துக்கு, பணவீக்கம் 7% என்றால், நமது முதலீட்டின் வருமானம் அதைவிட சில சதவிகிதங்கள் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால், நம் நாட்டில், ஒரு சில ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களே பணவீக்கத்தைவிட ஒன்றிரண்டு சதவிகிதம் அதிக வருமானம் தருகிறது. தங்கமோ, மிக நீண்ட காலத்தில் மட்டுமே, பணவீக்கத்தை ஒட்டிய வருமானத்தைத் தருவதாக இருக்கிறது. ஆக, எளிதில் காசாக்கக்கூடிய முதலீட்டு வகைகளில் பணவீக்கத்தைப்போல் இரண்டு, மூன்று மடங்கு வருமானத்தைத் தரவல்லது பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டும்தான்!

6. சிறு துளி; பெரு வெள்ளம்!

நீங்கள் இன்று ஒரு இடத்தையோ அல்லது வீட்டையோ வாங்கச் சென்றீர்களேயானால், உங்களிடம் நிறைய பணம் தயாராக இருக்க வேண்டும். அல்லது வங்கியில் கடன் பெற்று வாங்க வேண்டும்.

நீங்கள் ஒரு தொழில் ஆரம்பிக்கிறீர்கள் என்றால், அதற்காக பல காலம் பணத்தைச் சேர்த்து வைத்திருக்க வேண்டும். அல்லது கடன் வாங்கித் தொழிலை ஆரம்பிக்க வேண்டும். ஆக, நல்ல வருமானம் தரும் முதலீடுகளுக்கு நீங்கள் மொத்தமாகத் தொகையை வைத்திருந்தால்தான் முதலீடு செய்ய முடியும்.

ஆனால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு ஒரு பெருந்தொகையைத் திரட்டிக்கொண்டுதான் முதலீடு செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. மாதத்துக்கு ரூ.250-லிருந்து உங்களது முதலீட்டை ஆரம்பிக்கலாம். அதீத வளர்ச்சியுள்ள ஒரு முதலீட்டு வாய்ப்பில் பங்கேற்பதற்கு, இதைவிடக் குறைவான அளவில் வேறு எந்தச் சொத்திலும் ஒருவர் முதலீடு செய்ய முடியாது. ஒவ்வொரு மாதமும் 4,000 ரூபாயை அடுத்த 25 வருடங்களில் வருடத்துக்கு 15% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒருவரால் முதலீடு செய்ய முடியும் எனில், 25 ஆண்டு களுக்குப் பின் அவர் ஒரு கோடீஸ்வரர்!

7. பரவலாக்கம் தரும் ஒரே முதலீடு!

நீங்கள் ரியல் எஸ்டேட்டில் உங்களது முதலீட்டை பரவலாக்க வேண்டும் எனில், ஒவ்வொரு ஊரிலும் சொத்து வாங்க வேண்டும். உங்களது தொழிலில் ரிஸ்க்கை குறைக்க வேண்டுமானால், வெவ்வேறு விதமான தொழில்களை ஆரம்பிக்க வேண்டும். தேவைப்பட்டால் பல நாடுகளில் உங்களது தொழிலை நிறுவ வேண்டும். பங்குச் சந்தையில் நீங்கள் முதலீடு செய்தீர்களென்றால், உங்களது முதலீட்டை பரவலாக்க சில ஆயிரம் அல்லது சில லட்சம் ரூபாயாவது வேண்டும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒரு ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தீர்களேயானால், அது இந்தியாவில் உள்ள பல துறைகளைச் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யப் படுகிறது. இதன்மூலம் உங்கள் முதலீட்டின் ரிஸ்க் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கும் இதுவே பொருந்தும்.

8. செபியின் கடும் சட்டதிட்டங்கள்!

இன்று இந்தியாவில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம்புரளும் ரியல் எஸ்டேட் துறைக்கு இதுவரை ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு வாரியம் கிடையாது. ஆனால், இந்தத் துறையில்தான் நம்மவர்கள் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள். பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய அடுக்குமாடிக் குடியிருப்பின் கட்டட புரமோட்டர் சொன்னபடி, கட்டித்தரவில்லை எனில், நீங்கள் யாரிடம் சென்று புகார் செய்வீர்கள்? அவர்கள் கொடுக்கும் விற்பனை கையேட்டில், அவர்களைப் பற்றிய புகார் இருந்தால், யாரிடம் முறையிட வேண்டும் என்பது தெரியாது.

நீங்கள் வாங்கும் தங்க ஆபரணத்தில், அதிருப்தி இருப்பின் யாரிடம் சென்று முறையிட வேண்டும் என்று கடைக்காரர் தரும் ரசீதில் அச்சிடப்பட்டுள்ளதா? ஆனால், நீங்கள் மாதம் ரூ.250 முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் கையேட்டில், யாரிடம் புகார் செய்ய வேண்டும் என்பது அச்சிடப்பட் டிருக்கும். அவ்வாறு அவரும் செவி சாய்க்கவில்லை எனில், நீங்கள் செபியிடம் புகார் செய்யலாம். ஆகவே, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், கடும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட்டு வருவது, முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்புப் பாதுகாப்பு ஆகும்.

9. குறைவான செலவு, புரொஃபஷனல் நிர்வாகம்!

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தலைசிறந்த கல்லூரிகள்/ பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் திறமையான மாணவர்களையே வேலைக்கு எடுக்கின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் திறமையான அனலிஸ்ட்டுகள் மற்றும் ஃபண்ட் மேனேஜர்களைக் கொண்டு, தங்களது திட்டங்களை நிர்வாகம் செய்கின்றன.

பல இடங்களில் பணம் அதிகம் முதலீடு செய்பவர் களுக்கென்று தனிக் கவனிப்பு இருக்கும். ஆனால், இங்கோ நீங்கள் ரூ.5,000 முதலீடு செய்தாலும் சரி, ரூ.500 கோடி முதலீடு செய்தாலும் சரி, இருவருக்குமே ஒரே மேனேஜ்மென்ட் டீம்தான்.

10. முதலீடு செய்வது எளிமை!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது, பல முதலீடுகளைத் தொடங்குவதைக் காட்டிலும் மிகவும் எளிமையானது. ஒரே ஒருமுறை கேஒய்சி (KYC – Know Your Customer) படிவத்தைப் பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும். அது இந்தியாவில் உள்ள அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கும் சென்றடைந்துவிடும். அவ்வாறு கொடுக்கும் போது உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றுக்கான நகல்களைக் கொடுக்க வேண்டும்.

பிறகு உங்களிடம் வங்கி சேமிப்புக் கணக்கு காசோலையுடன் இருக்க வேண்டும். அவ்வளவுதான், நீங்கள் முதலீடு செய்யத் தயார். விண்ணப்பப் படிவத்துடன் ஒரு காசோலையை வைத்துக் கொடுத்துவிட்டால், யூனிட்டுகள் அன்றைய விலையில் வாங்கப்பட்டு விடும்.

11. தேவைக்கேற்ப சாய்ஸ்கள்!

நீங்கள் நமது மத்திய அரசாங்க பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா, அமெரிக்காவில், ஜப்பானில், ஐரோப்பாவில், சீனாவில் முதலீடு செய்ய வேண்டுமா, இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் அல்லது பொதுத்துறை வங்கிகளின் பாண்டுகளில் முதலீடு செய்ய வேண்டுமா, இந்தியாவின் வங்கித் துறையில் அல்லது மருந்துத் துறையில் அல்லது இன்ஃப்ரா துறையில் முதலீடு செய்ய வேண்டுமா,

தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமா, மிகக் குறுகிய காலத்துக்கு ரிஸ்க் இல்லாமல் வங்கிகளைவிட அதிக வட்டியில் முதலீடு செய்ய வேண்டுமா, நீண்ட காலத்துக்கு ரிஸ்க்குடன் கூடிய அதிக வருமானத்தில், வருமான வரி இல்லாமல் முதலீடு செய்ய வேண்டுமா? உங்களின் ஒவ்வொரு எண்ணத்துக்கும் முதலீட்டு வாய்ப்புக்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் உண்டு.

12. தேவைப்படும்போது பணம்!

நிலத்தையோ அல்லது வீட்டையோ நீங்கள் நினைத்த நேரத்தில் விற்க முடியாது. தங்கத்தை விற்கப்போனால், சந்தை விலை ஒன்றாக இருக்கும்; கடைக்காரர் வேறொரு விலைக்குக் கேட்பார். இந்த இரண்டு சொத்துக்களையும், வேண்டிய போதெல்லாம் பிரித்து சிறிது சிறிதாக விற்க முடியாது.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகளில் திட்டத்தைப் பொறுத்து ஒரு நாளிலோ அல்லது ஒரு வாரத்துக்குள்ளோ பணம் உங்களுக்குக் கிடைத்துவிடும். தேவைப்படுகிற அளவு நீங்கள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அது ரூ.5,000-ஆக இருந்தாலும் சரி, ரூ.50 லட்சமாக இருந்தாலும் சரி.

13. வருமான வரி இல்லை!

பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களுக்கு, ஒரு வருடத்துக்குமேல் வைத்திருக்கை யில் வருமான வரி ஏதும் இல்லை; கடன் சார்ந்த திட்டங்களுக்கு, மூன்று வருடங்களுக்குமேல் வைத்திருக்கையில் மிகவும் குறைவான வருமான வரி கட்டினால் போதும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்பட எல்லா முதலீடுகளுக்கும் வருமான வரி கட்டியாக வேண்டும்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் உங்கள் முதலீடு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருக்கையில், பணவீக்கத்துக்கு அட்ஜஸ்ட் செய்தபிறகு இருக்கும் லாபத்துக்கு வரி கட்டினால் போதுமானது. அவ்வாறு கட்டும் வரியின் சத விகிதம் மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும்.

இதுவே, நீங்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யும்போது, வரும் வட்டிக்கு உங்கள் வருமான வரம்பில் உள்ள சதவிகிதத்தில் நீங்கள் வரிச் செலுத்த வேண்டும்.

மேலும், கடன் சார்ந்த திட்டங்களில் நீங்கள் பணத்தை வெளியில் எடுக்கும் ஆண்டில்தான் வரித் தாக்கலுக்குக் கொண்டு வரவேண்டும். ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டில் வட்டி உங்கள் கைக்குக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் நீங்கள் வரிச் செலுத்த வேண்டும்.

இத்தனை பாசிட்டிவ் அம்சங்கள் நிறைந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்ய ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை என்பது மட்டும் நிச்சயம்!
--ந. விகடன்

தருண்

Posts : 1293
Join date : 08/10/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum